*நடுத்தர குடும்பத்தில் பிறந்து மாத ஊதியம் வாங்கிய ஒருவர், தன் ஊதியம் முழுவதையுமே சமூகசேவைக்காகச் செலவழித்திருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?

*மக்கள் வரிப் பணத்தில் அரசு தரும் சம்பளம் வாங்கிக்கொண்டு அலுவலகத்துக்கு செல்லாமல், வேறு பசையான தொழில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் பலர் வாழும் இந்த உலகில், அரசு தரும் ஓய்வூதியம் முழுவதையுமே பொது நலனுக்காக செலவிடுகிறார் என்பது த

ெரியுமா?

*35 ஆண்டுகள் பணி செய்த இவர் ஒரு நாள் ஊதியத்தை கூட தனக்காக இவர் எடுத்துக்கொள்ளவில்லை என்பது தெரியுமா?

*மாதம் ரூ.20,000/- சம்பளம் வாங்கிய போதிலும், அனைத்தையும் பொதுக் காரியங்களுக்கு கொடுத்துவிட்டு தனது வாழ்விற்கு தேவையானதை திருநெல்வேலியில் ஓட்டல் ஆர்யாஸில் மாலை நேரத்தில் சர்வராக வேலை பார்த்து சம்பாதித்துக்கொண்டவர் என்பது தெரியுமா? (ஓவராயிருக்கே…. என்று தானே நினைக்கிறீங்க ? இதுக்கு காரணத்தை அப்புறம் சொல்றேன்!)

*1969 இல் இவரது குடும்ப சொத்துக்களை பாகம் பிரித்த போது இவருக்கு கிடைத்த ரூ.5 லட்சம் மதிப்புடைய சொத்தை உடனடியாக தானம் செய்துவிட்டார். (1969ல் 5 லட்சம் என்றால் இப்போ அதன் மதிப்பு எத்தனை இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்…!)

*இவரது கண்கள் உள்ளிட்ட அனைத்து உடலுறுப்புக்களையும் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரிக்கு தானம் கொடுத்துவிட்டார். அதுவும் 25 ஆண்டுகளுக்கு முன்பாகவே.

*பொதுவாழ்க்கைக்கு மண வாழ்க்கை இடையூறாக இருக்கக் கூடாதென்று திருமணமே செய்துகொள்ளவில்லை இவர்.

*சிறுவயதிலேயே தந்தையை இழந்தவர் இவர். தாயாரின் அரவணைப்பில் வளர்ந்தவர். தாய் தான் தமது தயாள குணத்திற்கு ஆசான் என்று தாயாரை ஆராதிப்பவர்.

*ஏழை எளிய மக்கள் படும் துன்பங்களை நேரடியாக அறிந்துகொள்ள அவர்களுடனே சுமார் 7 ஆண்டுகளுக்கும் மேல் நடை பாதை வாசியாகவே வாழ்ந்திருக்கிறார்.

*ஆந்திர புயல், குஜராத் பூகம்பம், சுனாமி உள்ளிட்ட பேரிடர்களின்போது பல லட்ச ரூபாய்களை நன்கொடையாக திரட்டி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அளித்தவர்.

*1963 ல் இந்தியா – சீனா யுத்த நிதிக்காக காமராஜரிடம் தமது தங்கச் சங்கலியை தேசிய நிதிக்கு அளித்தவர்.

*தன் பெயருக்கு பின்னால் M.A. (Lit), M.S. (His)., M.A., (GT), B.Lib.Sc., D.G.T., D.R.T., D.M.T.I.F. & C.W.D.S. என பட்டங்களை பெற்றுள்ள இவர் அனைத்திலும் கோல்ட் மெடல் வாங்கிய முதல் மாணவர்.

*வாழ்நாள் முழுதும் தன பெயரில் ஒரு சென்ட் நிலமோ அல்லது ஒரு ஒலைக்குடியாசையோ அல்லது பணமோ இருக்கக் கூடாது என்ற கொள்கையுடையவர்.

*ஐந்தாவது ஊதியக் குழுவில் விடுபட்ட ஊதியத்தை 14 ஆண்டுகள் முன் தேதியுடன் அரசு வழங்கிய ரூ.10 லட்சத்தையும் தனது 70 வது பிறந்த நாளில் மக்களுக்கு அளித்தார்.

*ஆறாவது ஊதியக் குழுவில் பயன்பெறும் ரூ.5 லட்சத்தை ஏழைக் குழந்தைகளின் குழந்தைக்காக எழுதி வைத்துவிட்டார்.

*கோடிக்கணக்கில் அள்ளிக் கொடுத்த இவர் ஏழைகளுக்கு கிட்டாத உணவையோ அல்லது உடையையோ இருப்பிடத்தையோ பயன்படுத்தாமல் எளிய வாழ்க்கை வாழ்ந்து வருபவர்.

*இவரது ஆடை சாதாரண கதராடை தான். செருப்பு ரப்பர் செருப்பு தான்.

*தாம் கதர் உடுத்த ஆரம்பித்த காரணத்தை பற்றி கூறுகையில் : “எளிமையையும், காந்தீயம் பற்றியும் உரையாற்ற கல்லூரிகளுக்குச் சென்றுள்ளேன். மில் உடைகளுடன் எளிமையையும், காந்தியத்தையும் பற்றிப் பேசுவது என் மனத்தை உறுத்தியது. உடனேயே காதிக்கு மாறி விட்டேன்.” என்கிறார்.

*நூலகத் துறையில் இவரது சேவையை பாராட்டி நமது இந்திய அரசாங்கம் இவருக்கு “இந்தியாவின் சிறந்த லைப்ரரியன்” என்ற பட்டத்தை அளித்தது. “உலகத்து சிறந்த 10 லைப்ரரியன்களில் ஒருவர்” என்ற புகழ் பெற்றார்.

*உலக பயோகிராஃபிகல் மையம், கேம்பிரிஜ் – உலகத்தின் சிறந்த மனிதாபிமானி – என்று கெளரவித்தது.

*ஐக்கிய நாட்டுச் சபை “20-ம் நூற்றாண்டின் சிறந்த மனிதர்” என்று தேர்வு செய்து, பாராட்டியது.

*இவர் சேவைகளை பற்றி கேள்விப்பட்ட அமெரிக்க நிறுவனம் ஒன்று இவரை கௌரவிக்கும் வகையில் இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதராக – Man of the Millenium – இவரை தேர்ந்தெடுத்து $ 6.5 Million வழங்கியது. (சுமார் 30 கோடி ரூபாய்). அந்த நிதியை கூட அந்த விழா மேடையிலேயே சர்வதேச குழந்தைகள் நல அமைப்புக்கு நன்கொடையாக கொடுத்துவிட்டார்.

*சூப்பர் ஸ்டார் ரஜினி இவர் நற்பண்புகளை கேள்விப்பட்டு ஒரு விழாவில் “இவரை தந்தையாக” தத்து எடுத்து தன் வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டார். அங்கு அவரால் சில மாதங்களுக்கு மேல் இருக்க முடியவில்லை. மூன்றடுக்கு பாதுகாப்பு மிகுந்த அந்த சூழல் தன்னை சந்திக்க வரும் நண்பர்களுக்கும் உதவி கோரி வருபவர்களுக்கும் கடினமாக இருக்கிறது என்றும் அவரது சுதந்திரமான குணத்திற்கும் எளிமைக்கும் அந்த சூழல் ஒத்துவரவில்லை என்றும் கூறி அதை அன்புடன் மறுத்து வெளியே வந்துவிட்டார்.

இவருடைய பொது சேவைகள்:

1) ஏழை எளிய மாணவர்களை தத்து எடுத்து கொள்ளுதல்

2) மாணவ மாணவியர்களின் கல்வி வளர்ச்சிக்கு சீருடை, நோட்டு புத்தகம் வழங்குதல்

3) 10 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் மாநில அளவில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெறும் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பரிசு வழங்குதல்.

4) பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் நல் ஒழுக்கம், பொது அறிவு, அதிக மதிப்பெண் ஆகியவற்றுடன் தேர்வு அடையும் மாணவர்களுக்கு பரிசு வழங்குதல்.

இவரின் கொள்கைகள் என இவரது விசிட்டிங் கார்டின் பின்னால் காணப்படும் வாசகங்கள் :
என்றும் இன்பமுடன் இனிது வாழ எதன் மீதும் பேராசை கொள்ளாது இருப்போம்! பத்தில் ஒன்றை தானம் செய்வோம்!! தினமும் ஒரு உயிருக்கு நன்மை செய்வோம்!!!

பணம் மட்டுமே உலகம் என்றெண்ணி இயந்திர வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கு இவரின் வாழ்க்கை ஒரு பாடம்.

இத்தனை பெருமைக்கும் புகழுக்கும் சொந்தக்காரர்… ஐயா திரு.பாலம் கலியாண சுந்தரம்.

Comments