
இப்போது மாயன்களிடம் நாம் வரலாம்……..!
அதிசயிக்கத்தக்க வகையில் மாயன்கள் 20ஐ
அடியாகக் கொண்டு கணித்திருக்கிறார்கள். கைவிரல்கள் பத்து, கால் விரல்கள்
பத்து என இது அமைந்திருக்கிறது. 20ஐ அடியாகக் கொள்வதை, ‘வைஜெசிமல் சிஸ்டம்’
(Vigesimal System) என்பார்கள். அது 1, 20, 400, 8000, 160000….. என
அமையும். இதில் ஆச்சரியமான விசயம் என்னவென்றால், 20ஐ அடியாகக் கொண்டு
கணிப்பதற்கு மாயன்கள் இருபது இலக்கங்களைப் பாவனைக்கு வைத்திருக்கவில்லை.
மூன்றே மூன்று இலக்கங்களைத்தான் பாவித்திருக்கிறார்கள். அதிக எண்ணிக்கையில்
சுலபமாகக் கணிப்பதற்கு 20 இன் அடியும், கணினியைப் போல வேகமாய்க்
கணிப்பதற்கு மூன்று இலக்கங்களும் அவர்களுக்கு உதவியிருக்கிறது.
புள்ளி, நேர்கோடு, நீள்வட்டம் என்னும்
மூன்றும்தான் அவர்கள் பாவித்த அந்த மூன்று இலக்கங்கள். இவற்றில் புள்ளி
1ஐயும், நேர்கோடு 5ஐயும், நீள்வட்டம் பூச்சியத்தையும் குறிக்கிறது.
மாயன்கள் பாவித்த எண்களின் அட்டவணையைப் பார்த்தால் உங்களுக்கு அது புரியும்.
மாயன்கள் பாவித்த எண்களின் அட்டவணையைப் பார்த்தால் உங்களுக்கு அது புரியும்.

புள்ளிகளையும், கோடுகளையும் வைத்து,
லட்சங்களில் எப்படி மிகப் பெரிய எண்களைக் கணித்தார்கள் என்பதற்கான சில
விளக்கப் படங்களையும் உங்களுக்கான புரிதலுக்காகத் தருகிறேன்.




இதனுடன் இன்னுமொரு விசேசமாக, எண்ணிக்கைகளை
இலக்கங்களால் மட்டுமில்லாமல், ‘ஹிரொகிளிஃப்’ (Hieroglyph) என்னும் சித்திர
எழுத்துகள் மூலமும் எழுதியிருந்தார்கள். இந்த வழமை மாயாக்களுக்கும்,
எகிப்தியர்களுக்கும் தனிச் சிறப்பாக அமைந்திருந்தது. இந்தச் சித்திர
எழுத்துகள்தான் பின்னர் மாயன்களைப் பற்றி நாம் முழுமையாகப் புரிந்து கொள்ள
பெரிதாக உதவியது.

இந்த இலக்கங்களின் முறையை வைத்து மாயன்கள்
கோடிக்கனக்கான எண்ணிக்கையை கூட எழுதிவிடுகிறார்கள். சுலபமாக
கணித்துவிடுகிறார்கள். நாம் கோடிகள், ஆயிரம் கோடிகள் என்பவற்றை ஊழல்
பற்றிச் சொல்வதற்கு பயன்படுத்தும் போது, மாயன்கள் எதற்கு அவற்றைப்
பயன்படுத்தினார்கள் தெரியுமா….? வானியலில். வானத்தில் சூரியக்
குடும்பத்தின் ஒவ்வொரு கோளும் எப்படி நகர்கிறது என்பதைத் துல்லியமாக
கணித்தார்கள் மாயன்கள். அவர்கள் அப்படிக் கணித்ததுதான் கடைசியில் எங்கள்
அமைதியையே குலைக்கும், ’2012 இல் உலகம் அழியும்’ என்பதில் கொண்டு வந்து
விட்டும் இருக்கிறது.
மாயன்கள் வானவியலில் ஆராய்ச்சி
செய்தார்கள் என்று சொல்லும் நாம் அவர்கள் எதை ஆராய்ந்தார்கள் என்று
தெரிந்தால் நம்பவே முடியாமல் நகர்ந்துவிடுவோம். ஆம்! சூரியனையும், அதன்
கோள்களையும் மற்ற இனத்தவர்கள் ஆராய்ந்த போது, மாயன்கள் பால்வெளி
மண்டலத்தையே (Milky way) ஆராய்ந்திருக்கிறார்கள். வெறும் கண்களால்
சந்திரனைத் தாண்டி அவ்வப்போது செவ்வாய், வியாழன் ஆகியவற்றை மட்டுமே
பார்க்கக் கூடிய எமக்கு, மாயாக்கள் பால்வெளி மண்டலத்தையே ஆராய்ந்தார்கள்
என்றால், அதன் சாத்தியங்கள் எது என்பது பற்றி கேள்வி எழுவது நியாயமான
ஒன்றுதான்.
மாயாக்கள் அப்படி என்னதான் ஆராய்ந்தார்கள்? எப்படியெல்லாம் ஆராய்ந்தார்கள்?

கடந்த பதிவில் மாயனின் கணித அறிவைப் பற்றி
விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்பதற்காக, அவர்களின் கணிதத்தை அதிகமாக
விளக்கியது, பலருக்குப் புரிந்திருக்கலாம், சிலருக்குப் புரியாமல்
இருக்கலாம். புரியாமல் இருந்தது பற்றிக் கவலைப்படவே தேவையில்லை. எமக்குப்
புரிய வேண்டியது, மாயன்கள் கணிதத்தில் வல்லவர்களாக இருந்தார்கள் என்பது
மட்டும்தான்.
அமெரிக்கா என்று சொல்லப்படும் மிகப் பெரிய
நிலப்பரப்பு, வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா என்று
மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அமெரிக்காவில்
மெக்சிக்கோ, குவாத்தமாலா, எல் சல்வடோர், கோஸ்டா ரீகா, கொண்டுராஸ், பனாமா,
நிக்கரகூவா, பெலிசே, ஹைட்டி, கியூபா போன்ற நாடுகள் இருக்கின்றன. ‘உலக
அழிவுப் புகழ்’ மாயன்கள் வாழ்ந்து வந்த இடமும் இந்த மத்திய அமெரிக்க
நாடுகளில்தான். குறிப்பாக மெக்சிக்கோவிற்கு தென்கிழக்குப் பகுதியில்
ஆரம்பித்து, ஏறத்தாழ மூன்று இலட்சத்து ஐம்பதினாயிரம் (350000) சதுர கி.மீ
பரப்பளவுள்ள நிலப்பரப்பில் மாயன்கள் வாழ்ந்து வந்தார்கள்.
மாயனின் வரலாறு கி.மு.4000 ஆண்டுகளுக்கு
முன்னரே ஆரம்பமாகியிருக்கிறது என்பதற்கு சரித்திர ஆதாரங்கள்
கிடைத்திருக்கின்றன. ஆனாலும் கி.மு.2000 முதல் கி.பி.900 ஆண்டுகள் வரை உள்ள
காலப் பகுதிகளில்தான் மாயன்களின் நாகரீகம் உச்சத்தை அடைந்திருந்தது.
இந்தக் காலகட்டங்களில், உலகின் பல நாடுகளில், பல இனங்களுக்கிடையே மதங்கள்
தோன்றியிருந்தன. அப்படித் தோன்றிய மதங்களும், அதனைக் கடைப்பிடித்த
இனங்களும், நாம் வாழும் பூமிதான் பிரதானமானது என்று நினைத்திருந்தார்கள்.
பூமியை மையமாக வைத்தே சூரியன் உட்பட அனைத்துக் கோள்களும் இயங்குகின்றன
என்றும் நம்பி வந்தார்கள்.

கடவுள் முதலில் பூமியை உருவாக்கினார்.
அதன் பின்னர் பூமி இருட்டாக இருக்கிறது என்று கருதி, சூரியனையும்,
சந்திரனையும் படைத்தார் என்று பைபிள், குரான், யூதமதம் ஆகிய மூன்று பிரதான
மதங்களும் சொல்கின்றன. இந்து மதத்தின் உபவேதங்களில் ஒன்றான, ‘ஜோதிசம்’ எனச்
சொல்லப்படும் சோதிடத்தில், பூமியை மையமாக வைத்து நவக்கிரகங்கள்
சுற்றுகின்றன என்ற அடிப்படையிலேயே கணிப்புகள் யாவும் இருந்திருக்கிறது.
அஸ்ட்ராலாஜி (Astrology), அஸ்ட்ரானாமி
(Astronomy) என்னும் இரண்டு ஆங்கிலச் சொற்களை நாம் அடிக்கடி பாவித்தாலும்,
அவை இரண்டினதும் வித்தியாசத்தைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.
வானத்தில் இருக்கும் கோள்களைப் பற்றியும், நட்சத்திரங்களைப் பற்றியும் இந்த
இரண்டுமே சொல்வதால், இவற்றை அனேகர் ஒன்றாகவே பார்க்கின்றனர். ஆனால்
அஸ்ட்ரானாமி என்பது விஞ்ஞானம், அஸ்ட்ராலாஜி என்பது சாத்திரம். அதாவது ஒன்று
வானவியல் மற்றது வானசாத்திரம்.

மாயன் காலங்களில் உலகில் உள்ள பல
இனத்தவர்கள், வானத்தில் உள்ள நட்சத்திரங்களினதும், கோள்களினதும்
நகர்வுகளைக் கவனித்தே வந்திருக்கிறார்கள். ஆனால் எல்லோரும் ‘வான சாத்திரம்’
என்னும் நிலையில்தான் அவற்றைக் கவனித்திருக்கிறார்கள். மாயன்களோ அவற்றை
‘வானவியல்’ என்னும் அறிவியல் சிந்தனையுடன் வானத்தை ஆராய்ந்திருக்கிறார்கள்.
இதுவே இன்று அவர்கள் வசம் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
மாயன்கள் மிகத் துல்லியமாக சூரியன், பூமி, சந்திரன், செவ்வாய், புதன், சனி,
வியாழன் போன்ற கோள்களின் அசைவுகளைக் கவனித்திருக்கிறார்கள்,
கணித்திருக்கிறார்கள்.
மாயன்களின் வானியல் கணிப்பை உலகுக்கு
உரத்துச் சொல்லும் வரலாற்றுப் பதிவொன்று இன்றும் மாயன்கள் வாழ்ந்த
இடமொன்றில் நிமிர்ந்து நிற்கிறது. மெக்சிக்கோ நாட்டில் உள்ள யூகட்டான்
(Yucatan) மாநிலத்தில், மாயன்களால் கட்டப்பட்ட ‘ஷிசேன் இட்ஷா’ (Chichen
Itza) என்னும் பிரமிட்தான் அது. ‘பிரமிட்’ (Pyramid) என்றதும் எகிப்தின்
பிரமிட்கள்தான் உங்களுக்கு ஞாபகம் வரும். “மாயன்களிடமும் பிரமிட்
இருந்ததா?” என்று நீங்கள் பிரமிக்கலாம். ‘உலகின் விந்தைகளும், மர்மங்களும்
கடைசியில் ஒரு புள்ளியில் ஒடுங்கிவிடும்’ என்று நான் ஆரம்பத்தில் சொன்னது
போல, எல்லாவற்றிற்கும் இடை யில் ஏதோ தொடர்புகள் இருக்கலாம். அவற்றை பின்னர்
பார்ப்போம். அதற்கு முன்னர் ஷிசேன் இட்ஷா பற்றிப் பார்க்கலாம்.

வானியலை மாயன்கள் எந்த அளவுக்குப்
புரிந்திருக்கிறார்கள் என்பதற்கு அடையாளமாக இந்தப் பிரமிட்டை அவர்கள்
கட்டியிருக்கிறார்கள். நான்கு பக்கங்களைக் கொண்ட இந்தப் பிரமிட்டில்,
வரிசையாக ஒவ்வொரு பக்கமும் படிகள் அமைக்கப் பட்டிருக்கிறது. இந்த நான்கு
பக்கங்களும் நான்கு பருவ காலங்களைக் குறிக்கின்றன. ஒவ்வொரு பக்கத்திற்கும்
தலா 91 படிகள் இருக்கின்றன. மொத்தமாக நான்கு பக்கங்களும் சேர்த்து 364
படிகள். ஆனால், வருடத்திற்கு 365 நாட்கள் அல்லவா இருக்கிறது. அதை எப்படி
நான்காகப் பிரிப்பது? ஒரு படி மிஞ்சுமல்லவா? என்ன செய்தார்கள் மாயன்கள்?
கடைசியாக உச்சத்தில் ஒரு மேடையை ஒரே படியாக, சதுரமாகக் கட்டிவிட்டார்கள்.
மொத்தமாக 365 படிகள் வந்துவிட்டது. ஒரு வருடத்தின் நாட்களை பிரமிட்டாகவே
மாயன்கள் கட்டியிருப்பது, ஆராய்ச்சியாளர்களை இன்றும் வியப்பில்
ஆழ்த்தியுள்ளது.

பூமி, சூரியனைச் சுற்றிவர 365 நாட்கள்
எடுக்கிறது என்பதை மாயன்கள் எப்படிக் கணித்தார்கள்? இந்தத் துல்லியமான
வானவியல் கணிப்பு முறையை எப்படி அறிந்து கொண்டார்கள்? நட்சத்திரங்கள்,
கோள்கள் போன்றவை இயங்கும் விதத்தை எப்படி அவதானித்தார்கள்? என்னும்
கேள்விக்கெல்லாம் பதில் மாயன்கள் வாழ்ந்த இடத்திலேயே எமக்குக் கிடைத்தது.
அதை அறிவதற்கு முன்னர் இந்தப் படங்களைப் பாருங்கள்.



Comments
Post a Comment