அகப்பற்று நீக்கல்
தாமரையி னிலையினிலே தண்ணீர் தங்காத தன்மைபோலச் சகத்தாசை தள்ளி விட்டெங்கும் தூமணியாம் விளங்கிய சோதி பதத்தைத் தொழுது தொழுதுதொழு தாடாய்பாம்பே. | 70 |
கள்ளங் கொலை காமமாதி கண்டித்த வெல்லாம் கட்டறுத்து விட்டுஞானக் கண்ணைத் திறந்து தெள்ளிதான வெட்டவெளி சிற்சொ ரூபத்தைத் தேர்ந்துபார்த்துச் சிந்தைதெளிந் தாடாய் பாம்பே. | 71 |
சொல்லும்புளி யம்பழத்தி னோடு போலவே சுற்றத்திருந் தாலுமவர் தொந்தங் களற்று நில்லுமன மேநீபர நின்ம லத்திலே நின்றுணைதான் வெறும்பாழென் றாடாய் பாம்பே. | 72 |
சேற்றில் திரிபிள்ளைப்பூச்சி சேற்றை நீக்கல்போல் தேசத்தோ டொத்துவாழ்வார் செய்கை கண்டபின் சாற்றுபர வெளிதனைச் சாரும் வழியே தானடக்க வேணுமென் றாடாய் பாம்பே. | 73 |
எண்ணெய்குந் தண்ணீர்க்குந் தொந்தமில்லா வாறுபோல் எப்போதும் இப்புவியி லெய்த வேண்டும் கண்ணுக்குக் கண்ணான வொளிகண்டு கொள்ளவே கட்டறுத்து வாழ்ந்திடநின் றாடாய் பாம்பே. | 74 |
கக்கிவிட்ட சோறுகறி கந்த மூலங்கள் கண்களுக்கு சுத்தமான காட்சி போலவே சிக்கிக்கொண்ட சகத்தினைச் சீயென் றொறுத்துச் சீர்பாதங் காணத்தெளிந் தாடாய் பாம்பே. | 75 |
கோபமென்னும் மதயானை கொண்ட மதத்தை கூர்கொள்யுத்தி அங்குசத்தாற் கொன்று விட்டோங்காண் தீபமென்னுஞ் சிற்சொரூப செய்ய பொருளைச் சேர்ந்துறவு கொண்டோமென் றாடாய் பாம்பே. | 76 |
நித்தியமென் னுமலையில் நின்று கொண்டோம்யாம் நினைத்தபடியே முடித்து நின்மல மானோம் சத்தியமாய் எங்கள் கடந்தானழி யாதே சந்ததமும் வாழ்வோமென் றாடாய் பாம்பே. | 77 |
மனமென்னுங் குதிரையை வாகன மாக்கி மதியென் னுங்கடிவாளம் வாயிற் பூட்டிச் |
சினமென்னுஞ் சீனிமேற் சீரா யேறித் தெளிவிடஞ் சவாரிவிட் டாடாய் பாம்பே. | 78 |
ஆசையென்னுஞ் செருப்பின்மேல் அடிமை வைத்தே ஆங்கார முட்காட்டை அறவே மிதித்தே காசையெனுந் துர்குணத்திற் கனலைக் கொளுத்திக் காலாகாலங் கடந்தோமென் றாடாய் பாம்பே. | 79 |
காலனெனுங் கொடிதான கடும்ப கையைநாம் கற்பமெனும் வாளினாலே கடிந்து விட்டோம் தாலமதிற் பிறப்பினைத் தானும் கடந்தோம் தற்பரங் கண்டோமென் றாடாய் பாம்பே. | 80 |
தேனில் வீழ்ந்த ஈயைப்போலச் சிந்தை குலைந்து திகையாமற் சிற்சொரூப தெரிச னைகண்டு வானிற் பறந் திடச்சூத வான்ம ணிதீர்ந்து வாயிற்போட் டேகநீநின் றாடாய் பாம்பே. | 81 |
தூக்கியநற் பாதங்கண்டேன் சோதியும் கண்டேன் சுத்தவெளிக் குள்ளேயொரு கூத்தனைக் கண்டேன் தாக்கிய சிரசின்மேல் வைத்த பாதம் சற்குருவின் பாதமென் றாடாய் பாம்பே. | 82 |
ஆலடிப் பொந்தினிலே வாழ்ந்த பாம்பே அரசடிப் பொந்திலே புகுந்து கொண்டாய் வாலடி தன்னிலே பார்த்துப் பார்த்து வாங்கியே தூங்கிநின் றாடாய் பாம்பே. | 83 |
நாலு தெருவினிலே நாலு கம்பம் நடுத்தெரு வினிலேயோ பொன்னுக் கம்பம் போலும் விளங்குபொன்னுக் கம்பத்தி னுக்கே பூமாலை சூட்டிநின் றாடாய் பாம்பே. | 84 |
ஆழிபெயர்ந் தாலுமேரு மட்டேயலையும் அடியோடு பெயர்ந்தாலு மன்றிக் கால ஊழிபெயர்ந்து தாலுமதி யுண்மைப் படிக்கே உறுதி பெயராதுநின் றாடாய் பாம்பே. | 85 |
வாயுவினை இரையாக வாங்கி உண்டே வருடிக்கு நீரினை வாயுள் மடுத்தே தேயுபிறை குளிர்காய்ந்து வெட்ட வெளியில் திகைப்பறச் சேர்ந்துநின் றாடாய் பாம்பே. | 86 |
மாசில்கதி வளையிலே மண்டல மிட்டே மதியான பெரும்பட மடலை விரித்தே ஆசில்பரா பரமான ஆதி பாதத்தை அடுத்தடுத் தேதுதித் தாடாய் பாம்பே. | 87 |
காடுமலை நதிபதி காசி முதலாய்க் கால்கடுக்க ஓடிப்பலன் காணலாகுமோ வீடுபெறும் வழிநிலை மேவிக்கொள்ளவே வேதாந்தத் துறையினின் றாடாய் பாம்பே. | 88 |
எள்ளளவும் அன்பகத்தில் இல்லா தார்முத்தி எய்துவது தொல்லுலகில் இல்லை யெனவே கள்ளப்புலன் கட்டறுத்துக் கால காலனைக் கண்டு தொழுதேகளித் தாடாய் பாம்பே. | 89 |
சூரியனைக் கண்டபனி தூர வோடல்போல் சொந்தபந்தஞ் சிந்தபரி சுத்த தலத்தில் ஆரியனைக் கண்டுதரி சித்தே யன்புடன் அகலாமற் பற்றித் தொடர்ந் தாடாய் பாம்பே. | 90 |
காந்தம்வலி யிரும்புபோல் காசில் மனத்தைக் காட்சியான வஸ்துவுடன் கலக்கச்சேர்த்துச் சாந்தமுடன் தோண்டியும் தாம்பும் போலச் சலியாமற் தொடர்ந்து நின் றாடாய் பாம்பே. | 91 |
உளியிட்ட கற்சிலையில் உண்டோ உணர்ச்சி உலகத்தின் மூடர்களுக் குண்டோ உணர்ச்சி புளியிட்ட செம்பிற்குற்றம் போமோ அஞ்ஞானம் போகாது மூடருக்கென் றாடாய் பாம்பே. | 92 |
திரளான போரிலூசி தேடல் போல்முத்தி சிக்காது தேசாசார தேசிகர் தம்மால் |
அருளான மூலகுரு வையர் செயலால் ஆனந்தங் கொண்டோமென் றாடாய் பாம்பே. | 93 |
ஏட்டுச்சுரைக் காய்கறிக்கிங் கெய்தி டாதுபோல் எண்டிசைதி ரிந்துங்கதி யெய்த லிலையே நாட்டுக்கொரு கோயிற்கட்டி நாளும் பூசித்தே நாதன்பாதங் காணார்களென் றாடாய் பாம்பே. | 94 |
தன்னையறிந் தொழுகுவார் தன்னை மறைப்பார் தன்னையறி யாதவரே தன்னைக் காட்டுவார் பின்னையொரு கடவுளைப் பேண நினையார் பேரொளியைப் பேணுவாரென் றாடாய் பாம்பே. | 95 |
பாலிற்சுவை போலுமெங்கும் பாய்ந்த வொளியைப் பற்றுப்பொன் பற்றவைத்த பான்மை போலே காலிற்சுழு முனைநின்று கண்டு கொண்டு களித்துக் களித்துநின் றாடாய் பாம்பே. | 96 |
தேக்கெடுத்தே ஓடும்வானத் தேனை உண்டபின் தேகபந்தம் கொண்டனமித் தேச வாழ்வினை ஓக்காளமென் றெண்ணிமிகு மோகை யுடனீ உள்ளந் தெளிந்துநின் றாடாய் பாம்பே. | 97 |
சதுர்வேதம் ஆறுவகை சாஸ்தி ரம்பல தந்திரம் புராணங்கலை சாற்று மாகமம் விதம்வித மானவான வேறு நூல்களும் வீணான நூல்களேயென் றாடாய் பாம்பே. | 98 |
சமயபேதம் பலவான சாதி பேதங்கள் சகத்தோர்க்கே யல்லாதுசற் சாதுக் களுக்கோ சிமயத்தி லேறினபேர் சித்த மாறுமோ சித்தர்சித் தாந்தந்தேர்ந் தாடாய் பாம்பே. | 99 |
பூசைசெய்த தாலேசுத்த போதம் வருமோ பூமிவலஞ் செய்ததனாற் புண்ணிய முண்டோ ஆசையற்ற காலத்திலே ஆதி வஸ்துவை அடையலா மென்றுதுணிந் தாடாய் பாம்பே. | 100 |
மூலவேர றிந்துகொண்டால் மூன்று லகமும் முன்பாகவே கண்டுநித்ய முத்தி சேரலாம் சாலவேர றிந்ததாலே தான்பய னுண்டோ சகத்தைப்பொய் யென்றுதெளிந் தாடாய் பாம்பே. | 101 |
சகத்தனாதி யென்றிடாது தான னாதியார் சமைந்ததென் றுரைப்பார்கள் சத்தை யறியார் மகத்துவ நிலைகற்ப வன்மை யல்லாது மற்றும் வன்மை யில்லையேயென் றாடாய் பாம்பே. | 102 |
ஆயிரத்தெட்டி தழ்வீட்டி லமர்ந்த சித்தன் அண்டமெல்லாம் நிறைந்திடும் அற்புதச் சித்தன் காயமில்லா தோங்கிவளர் காரணச் சித்தன் கண்ணுளொளி யாயினானென் றாடாய் பாம்பே. | 103 |
நாற்பத்துமுக் கோணநிலை நாப்ப ணதாக நாடுமக்க ரச்சொரூப நாய கன்தனை மேற்படுத்திக் கொண்டாலந்த மேலு லகெலாம் மெல்லடிக்குத் தொண்டேயாமென் றாடாய் பாம்பே. | 104 |
கண்டவர்கள் ஒருக்காலும் விண்டி டார்களே விண்டவர்கள் ஒருக்காலும் கண்டி டார்களே கொண்டகோல முள்ளவர்கள் கோனிலை காணார் கூத்தாடிக்கூத் தாடியேநீ யாடாய் பாம்பே. | 105 |
ஆறுகலைக் குச்சுக்குள்ளே ஆடுமொருவன் அயல்வீடு போகுமுன்னே அரண்கோ லிக்கொள்ளு வேறுபட்டால் அவன்றனை மீட்ட லரிதே மேவிமுன்னே விடாதுகொண் டாடாய் பாம்பே. | 106 |
எண்ணரிய புண்ணியங்கள் எல்லாஞ் செய்துமென் ஏகனடி நெஞ்சமதி லெண்ணா விடிலே பண்ணரிய தவப்பயன் பத்தி யில்லையேற் பாழ்படு மென்றுதுணிந் தாடாய் பாம்பே. | 107 |
எவ்வுலகுஞ் சொந்தமதாய் எய்தும் பயனென் எங்களாதி பதாம்புயம் எண்ணாக் காலையில் |
இவ்வுலக வாழ்வுதானு மின்றே அறுமென்று எண்ணிக்கர்த்தன் அடிநினைந் தாடாய் பாம்பே. | 108 |
மணக்கோலங் கொண்டுமிக மனம கிழ்ந்துமே மக்கள்மனை சுற்றத்தோடு மயங்கி நின்றாய் பிணக்கோலங் கண்டுபின்னுந் துறவா விட்டால் பிறப்புக்கே துணையாமென் றாடாய் பாம்பே. | 109 |
பிறப்பையும் இறப்பையும் அறுத்து விடயான் பெருமருந் தொன்று சொல்வேன் பெட்புடன் கேளாய் திறப்புடன் மனப்பூட்டுஞ் சிந்தைக் கதவும் திறந்திடும் வகையறிந் தாடாய் பாம்பே. | 110 |
இறந்தவர் ஐவரவர் இட்ட மானவர் எய்தும்அவ ரிறந்தாரென் றெல்ல வார்க்குஞ்சொல் மறந்தவர் ஒருவரென்றே மண்ணினி லுள்ளோர் வகையறிந் திடவேநின் றாடாய் பாம்பே. | 111 |
எண்சீர் விருத்தம் ஆகார முதலிலே பாம்ப தாக ஆனந்த வயலிலே படம் விரித்தே ஊகார முதலிலே யொத்தொ டுங்கி ஓடி வகாரத்தி னாவை நீட்டிச் சீகாரங் கிடந்ததோர் மந்திரத் தைச் சித்தப்பி டாரனார் போதஞ் செய்ய மாகாரப் பிறப்பையும் வேர றுத்து மாயபந்தங் கடந்தோமென் றாடாய் பாம்பே. | 112 |
தந்திரஞ் சொல்லுவார் தம்மை யறிவார் தனிமந்தி ரஞ்சொல்லுவார் பொருளை யறியார் மந்திரஞ் செபிப்பார்கள் வட்ட வீட்டினுள் மதிலினைச் சுற்றுவார் வாயில் காணார். அந்தரஞ் சென்றுமே வேர்பி டுங்கி அருளென்னும் ஞானத்தால் உண்டை சேர்த்தே இந்த மருந்தினைத் தின்பீ ராகில் இனிப்பிறப் பில்லையென் றாடாய் பாம்பே. | 113 |
களிமண்ணி னாலொரு கப்பல் சேர்த்தே கனமான பாய்மரங் காண நாட்டி அளிபுலந் தன்னையே சுக்கா னாக்கி அறிவென்னு மாதாரச் சீனி தூக்கி வெளியென்னும் வட்டத்தே யுள்ள டக்கி வேதாந்தக் கடலினை வெல்ல வோட்டித் தெளிவுறு ஞானியா ரோட்டுங் கப்பல் சீர்பாதஞ் சேர்ந்ததென் றாடாய் பாம்பே. | 114 |
உள்ளத்துக் குள்ளே யுணர வேண்டும் உள்ளும் புறம்பையு மறிய வேண்டும் மெள்ளக் கனலை யெழுப்ப வேண்டும் வீதிப் புனலிலே செலுத்த வேண்டும் கள்ளப் புலனைக் கடிந்து விட்டுக் கண்ணுக்கு மூக்குமேற் காண நின்று தெள்ளு பரஞ்சோதி தன்னைத் தேடிச் சீர்பாதம் கண்டோமென் றாடாய் பாம்பே. | 115 |
ஓங்காரக் கம்பத்தின் உச்சி மேலே உள்ளும் புறம்பையு மறியவேண்டும் ஆங்காரக் கோபத்தை யறுத்து விட்டே ஆனந்த வெள்ளத்தைத் தேக்கிக் கொண்டே சாங்கால மில்லாமற் தாணு வோடே சட்டதிட்ட மாய்ச்சேர்ந்து சாந்த மாகத் தூங்காமல் தூங்கியே சுக மடைந்து தொந்தோம் தொந்தோமென் றாடாய் பாம்பே. | 116 |
விரகக் குடத்திலே பாம்ப டைப்போம் வேதாந்த வெளியிலே விட்டே யாட்டுவோம் காரணங்க ளைப்பிடுங்கி இரைகொ டுப்போம் காலக் கடுவெளிநின் றாட்டு விப்போம் துரகந் தனிலேறித் தொல்லுல கெங்கும் சுற்றிவலம் வந்து நித்ய சூட்சங் கண்டும் உரையற்ற மந்திரஞ் சொல்லி மீட்டோம் ஒருநான்கும் பெற்றோமென் றாடாய் பாம்பே. | 117 |
காயக் குடத்திலே நின்ற பாம்பைக் கருணைக் கடலிலே தியங்க விட்டு நேயச் சுழுமுனை நீடு பாய்ச்சி நித்யமான வஸ்துவை நிலைக்க நாடி மாயப் பெருவெளி தன்னி லேறி மாசற்ற பொருளினை வாய்க்கத் தேடி ஆயத் துறைகடந் தப்பாற் பாழின் ஆனந்தஞ் சேர்ந்தோமென் றாடாய் பாம்பே. | 118 |
மூலத் தலத்திலே நின்ற கருத்தை முற்றுஞ் சுழுமுனை தன்னி லூடே மேலத் தலத்திலே விந்து வட்டம் வேலை வழியிலே மேவி வாழும் பாலத் திருத்தாய்க் கருணை யதனால் பரகதி ஞானசொ ரூபமாகி ஆலச் சயனத்து மாலுட னின்றே ஆனந்தஞ் சேர்ந்தோமென் றாடாய் பாம்பே. | 119 |
புலனைந்து வீதியில் வையாளி பாயும் புரவி யெனுமனதை ஒருமைப் படுத்தி மலபுந்த வுலகங் கடந்த தாலே மன்னுகுரு பாதத்தி னிலையை நாடித் தலமைந்து பூலோகங் கடந்த தாலே சந்திர மண்டலமுங் கடந்த தாகும் அலமந்து பூலோகக் கடலை நீக்கி ஆனந்த மாகிநின் றாடாய் பாம்பே. | 120 |
குருவென்னும் ஆசானி னுருவெ டுத்துக் குறியான ஞானந்துப் பாக்கியாக்கி அருளென்னும் அருளையே உண்டை யாக்கி ஆனந்த மாகவே அதைக்க டந்தே மருளென்னு மாதர்மன நெறியைத் தொட்டு வாங்காம லெரிந்திட நெட்டை யிட்டு பருவளைக் குள்ளேயே பட்ட தென்றே பற்றானைப் பற்றிநின் றாடாய் பாம்பே. | 121 |
கன்னான் குகையிலே கான்ம றிப்போம் கருமா னுலையிலே தீயை மூட்டுவோம் சொன்னார் தலையிலே பொன்னை யாக்குவோம் கருதி யருகல்வி ஒப்பஞ் செய்வோம் மின்னார்கள் பாசத்தை விட்டே யெரிப்போம் மெய்ப்பொருட் குறிகண்டு விருப்பை யடைவோம் பன்னாதே பன்னாதே சும்மா விருந்து பராபரஞ் சேர்ந்தோமென் றாடாய் பாம்பே. | 122 |
சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம் சந்தை வெளியினிலே கோலை நாட்டுவோம் வீதிப் பிரிவினிலே விளையா டிடுவோம் வேண்டாத மனையினி லுறவு செய்வோம் சோதித் துலாவியே தூங்கி விடுவோம் சுகமான பெண்ணையே சுகித்தி ருப்போம் ஆதிப் பிர்மர்கள் ஐந்து பேரும் அறியார்கள் இதையென் றாடாய் பாம்பே. | 123 |
நெட்டெழுத் ததனிலே நிலைபி டித்து நீங்கா வெழுத்திலே வாலை முறுக்கி விட்டவ் வெழுத்திலே படம்வி ரித்து விண்ணின் வழியிலே மேவி யாடிப் பட்ட வெழுத்தையும் பதிந்தி ருப்போம் பன்னிரண் டாமெழுத்தினிற் பன்னிக் கூடித் திட்டமுட னெமக்கருள் தேசிக னார்தம் சீர்பாதஞ் சேர்ந்தோமென் றாடாய் பாம்பே. | 124 |
ஊசித்துளைக் குடத்தினிற் பாம்பை யடைப்போம் உலகெலாஞ் சுற்றி யுலாவிவருவோம் மாசுள்ள பிறவியை மறந்தி ருப்போம் மனமொத்த வெளியிலே விட்டே யாட்டுவோம் மாசுப் புலன்களை இரைகொ டுப்போம் மனமுற்ற உச்சியிலேறி யாடுவோம் பேசு மெழுத்தையும் விழுங்கி விடுவோம் பிறப்பிறப் பற்றோமென் றாடாய் பாம்பே. | 125 |
ஆணிக் குடத்திலே பாம்ப டைப்போம் அக்கினிக் கோட்டைமே லேறிப் பார்ப்போம் மாணிக்கத் தூணின்மேல் விட்டே யாட்டுவோம் மனம்வாக்குக் காயத்தை யிரைகொ டுப்போம் நாணிக் கயிற்றையும் அறுத்து விடுவோம் நமனற்ற நாதன்பதம் நாடியே நிற்போம் ஏணிப் படிவழிகண் டேறி விடுவோம் யாருமிதை அறியாரென் றாடாய் பாம்பே. | 126 |
வடக்குங் கிழக்குமாக நூலை யிழைப்போம் மற்றுஞ் சுழலிலே பாவு பூட்டுவோம் நடக்கும் வழியினிலே யுண்டைசேர்ப்போம் நடவா வழியினிலே புடவை நெய்வோம் குடக்குக் கரையினிலே கோலைப் போடுவோம் கொய்ததை எங்குமே விற்று விடுவோம் அடக்கியே யேகத்துளே வைக்கவும் வல்லோம் ஆதிபதங் கண்டோமென் றாடாய் பாம்பே. | 127 |
சூத்திரக் குடத்திலே பாம்பை யடைப்போம் சுழுமுனைக் குள்ளேயோ சுகித்தி ருப்போம் பாத்திரங் கொண்டுமே பலியி ரப்போம் பத்தெட்டு மூன்று படிகட ந்தோம் ஊத்தைச் சடலத்தினைப் புடமே யிடுவோம் உளவ னெமக்குநல் லுறுதி சொல்லப் பார்த்துரை யிதன்மெய் பலிக்க வெண்ணிப் பதனம் பதனமென் றாடாய் பாம்பே. | 128 |
மவ்வக் குடத்திலே பாம்ப டைப்போம் மணிவட்ட வாசியை வாரி யுண்டோம் வவ்வக் குடங்களைத் தள்ளி விடுவோம் வக்கிர சொர்ப்பனந் தாண்டி விடுவோம் பவ்வ வெளியிலே விட்டே வாட்டுவோம் பஞ்ச கருவியைப் பலிகொ டுப்போம் சிவ்வுரு வாகியே நின்றோ மென்றே சீர்பாதங் கண்டுதெளிந் தாடாய் பாம்பே. | 129 |
Comments
Post a Comment